Dharmapuri:மனைவி, மகன்களைக் கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை!

Advertisements

குடும்ப தகராறு காரணமாக மனைவி, மகன்களைக் கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் மணிக்கட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நந்தினி (வயது 28). இந்தத் தம்பதிக்கு அபினேஷ் (வயது 6), தர்ஷன் (வயது 5) என்ற 2 மகன்கள் இருந்தனர். சமீபகாலமாகக் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலைச் சிவன் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சிவனின் வீட்டை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் நந்தினி, அவருடைய 2 மகன்களும் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மனைவி, மகன்கள் உடல்களுக்கு அருகே சிவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். முதலில் மயக்க நிலையில் கிடந்த சிவனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அவர்களுடைய உடல்களைக் கைப்பற்றுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களைச் சேகரித்து கொண்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவனும் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலைப் போலீசார் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகன்களைக் கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *