ஒரே நாளில் சிதைந்த விவசாயியின் வாழ்வாதாரம்.!

Advertisements

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வெள்ளாடுகளுக்குத் தண்ணீரில் நஞ்சு கலந்ததில் 17 ஆடுகள் இறந்ததால் விவசாயி கவலையடைந்துள்ளார்.

தாராபுரம் அருகே உள்ள எரசனம்பாளையம் ஊராட்சியில் விவசாயி ஸ்ரீரங்கசாமி, அவர் மனைவி பழனியாத்தாள் இருவரும் தங்கள் தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆடுகளை மேய்ச்சலுக்காக, தங்களுக்குச் சொந்தமான அரவான் காட்டுத் தோட்டத்தில் விட்டுள்ளனர்.

ஆடுகள் தண்ணீர் குடிக்க வசதியாக, தண்ணீரைத் தொட்டியில் ஊற்றி வைத்துவிட்டு, ஸ்ரீரங்கசாமி வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர், மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் ஒவ்வொன்றாகத் தண்ணீர் குடித்த நிலையில், திடீரெனச் சுருண்டு விழுந்துள்ளன. இதைப் பார்த்த பக்கத்துத் தோட்டத்துக்காரர், ஸ்ரீரங்கசாமிக்குச் செல்பேசியில் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டதும், பதறியபடி ஸ்ரீரங்கசாமியும் பழனியாத்தாளும் தோட்டத்திற்குச் சென்றனர். அங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 25 ஆடுகளில், 17 ஆடுகள் தோட்டத்தின் பல பகுதிகளில் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து உடனடியாக மூலனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களையும் அழைத்து வந்தனர்.

இறந்த ஆடுகளைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், ஆடுகள் குடித்த தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினர். அதனை அருந்தியதாலேயே 17 ஆடுகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் ஒரே நாளில் சிதைந்துவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *