Dengue fever: சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலில் சிறு குழந்தைகளின் உயிர் பலியாகி வருகிறது. திருப்பத்தூரை சேர்ந்த சிமித்ரா என்பவரின் நான்கு குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. அதில் அபிநிதி என்ற 4 வயது சிறுமிக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் திருப்பத்தூரிலிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குச் சிறுமிக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற குழந்தைகளுக்கும் காய்ச்சல் இருப்பதால் கண்காணிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் பகுதியில் மேலும் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகச் சிசிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாகக் கடந்த 10ம் தேதி சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இதே போன்று அரியலூர் மாவட்டம் தா. பழூரை சேர்ந்த 60 வயது முதியவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். டெங்கு பாதிப்பு பரவலாகக் காணப்படுவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தர்மபுரி பகுதிகளில் டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பதால் டெங்கு பாதிப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அக்டோபர் 1ம் தேதி முதல் ஆயிரம் டெங்கு பாதிப்பு தடுப்பு முகாம்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *