சட்டவிரோத சூதாட்ட கிளப்பை மூடக் கோரி சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடியில் தவெக பிரமுகர் ஒருவர் சட்டவிரோதமாகச் சூதாட்ட கிளப்பும், மதுக் குடிப்பகமும் நடத்தி வருகிறார். சமூகத்துக்குக் கேடான அந்தக் குடிகாரர்களின், சூதாட்டக்காரர்களின் கூடாரத்தை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கள்ளுண்ணாமை, பிறனில் விழையாமை, சூதாடாமை ஆகிய நற்பண்புகளை வலியுறுத்தியுள்ளார் திருவள்ளுவர்.
ஆனால் மக்களாட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, மக்களுக்கான ஆட்சி என்று கூறப்படும் இந்நாளில் மக்களைக் குடிகாரர்களாக ஆக்குவதே அரசு தான். திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டை 60 ஆண்டுகளாகச் சுரண்டி விட்டன. ஊழலுக்கு வித்திட்டு அதை மரமாக வளர்த்துப் பழம் பறித்துத் தின்றுவிட்டன என்றும், தீய சக்தியை வேரறுப்போம் என்றும், மாற்றம் தருவோம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசும் எந்த மாற்றமும் தரவில்லை.

திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் இருந்த அதே டாஸ்மாக் சாராயக் கடைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. எழுநூற்றுச் சொச்சம் கடைகளை மூடிவிட்டதாகக் கூறித் திறந்திருக்கும் கடைகளின் அருகிலேயே பதாகை வைத்து விளம்பரம் தேடுகிறது. உண்மை என்னவென்றால் எந்தக் கடையுமே மூடப்படவில்லை. புதிதாக மனமகிழ் மன்றங்கள் என்னும் பெயரில் பல்லாயிரம் மதுக்கடைகளும் குடிப்பகங்களும் திறக்கப்பட்டுத் தமிழ் மக்களைக் குடி மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.

அப்படித்தான் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டையபுரம் சாலையின் தனியார் பிளாக் பாரஸ்ட் பேக்கரி கடைக்குப் பின்புறம் ரகமத் நகர் செல்லும் குறுக்குச் சாலையில் ஹரிஷ்மா ரெக்ரியேசன் கிளப் அதாவது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சட்டவிரோதச் சூதாட்ட கிளப் இயங்கி வருகின்றது. இத்தகைய சட்டவிரோத சூதாட்ட கிளப்பையும் முழு நேர மதுவிற்பனைக் கூடாரங்களையும் நடத்தி வருபவர் யாரென்றால், தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும், தமிழ்நாடு வ.உ.சிதம்பரனார் இளைஞர் அமைப்பின் மாநிலச் செயலாளராருமான திருச்சிற்றம்பலம் தான்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை எப்பேர்ப்பட்ட நாட்டுப்பற்றாளர். நாட்டு விடுதலைக்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்த அந்தத் தன்னலமற்ற தலைவர் பெயரிலான இளைஞர் அமைப்பை வைத்துக்கொண்டு, இளைஞர்களைக் குடி மயக்கத்திலும், சூதின் பிடியிலும் ஆழ்த்தும் மது சூதுக் கூடங்களை நடத்தி வருகிறார் இந்தத் திருச்சிற்றம்பலம். ஹரிஷ்மா என்னும் பெயரிலான இந்தச் சட்டவிரோதச் சூதாட்ட கிளப் காலி இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்றுமதி நிறுவனத்தின் மூன்று பழைய கண்டெய்னர்களில் சராசரியாக ஒரு சூதாட்ட கிளப்பில் 9 பேர் விளையாடும் வகையில் மூன்று கண்டெய்னர் பெட்டிகளைச் சட்டவிரோத மதுபானம் மற்றும் சூதாட்ட கிளப்பாக மாற்றி விளையாடி வருகின்றனர். ஒரு சுற்றுக்கு மூவாமயிரம் ரூபாய் வீதம் சராசரியாக 9 பேர் ஆடும் இத்தகைய சூதாட்டத்தில் ஒரே நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை பணப்பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தின் தீவீர ஆதரவாளராகக் காட்டிக் கொள்ளும் திருச்சிற்றம்பலம் சிப்காட் காவல்நிலைய அதிகாரிகளுக்கு முறையான மாமூல்களை வழங்கி வருவதோடு இத்தகைய சூதாட்ட கிளப்களைச் சட்டவிரோதமாக நடத்திட அமைச்சரின் பெயரைக் கூறிப் பல்வேறு தரப்பினரை மிரட்டி வருகிறார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று நிறையச் சட்டவிரோதச் சூதாட்ட கிளப்கள் இயங்கி வருகின்றன. இவை குறித்துக் காவல்துறையினருக்குப் போதிய சான்றுகளை அளித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோத ஹரிஷ்மா சூதாட்ட கிளப் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரித் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலரான அக்ரி பரமசிவன் மனு அளித்துள்ளார்.

சட்டவிரோதச் சூதாட்டக் கிளப்பையும், மதுக் கூடத்தையும் மூட  வேண்டும் என்று அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவெக ஆட்சியமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியைப் போலவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதைவிட மோசமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொலை, கொள்ளை, கடத்தல், சங்கிலி பறிப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அடிதடி, வன்முறை என அத்தனைக் குற்றங்களுக்கும் மதுவே காரணமாக உள்ளது. அந்த மதுவைக் கடைவிரித்து அரசே விற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் மனமகிழ் மன்றங்கள் என்கிற பெயரில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைக்க வழிவகைகள் செய்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் தவெக பிரமுகர் என்றும், அமைச்சர் ஸ்ரீநாத்தின் வலக்கை என்றும் கூறிக்கொள்ளும் திருச்சிற்றம்பலத்தின் ஹரிஷ்மா சட்டவிரோத மதுக் குடிப்பகம், சூதாட்டக் கிளப் ஆகியவற்றின் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கின்றனவா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *