
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.
இதற்குப் பிறகு, டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்தத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சராக யார் பதவியேற்கப் போவதென்பதற்கான தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
