
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி ராஜாவின் மனைவி ஆனி ராஜா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியைத் தவிர்த்து விட்டு வேறு மாநிலங்களில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுமாறு ராகுல் காந்திக்கு டி ராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாட்டில் மட்டும் வெற்றி பெற்றார்.
அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, ராகுலுக்கு சவாலாக உள்ளார்.இதனால், இங்கு ராகுலை களம் இறக்க வேண்டாமென நினைத்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் அவரை வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவித்தது.
இதுகுறித்து டி.ராஜா கூறி இருப்பதாவது:-“கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதியில் வயநாடு ஒன்று. அங்கு எங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டோம். இந்நிலையில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால் ராகுல் காந்தி ஒரு மாநிலத்தைச் சேர்ந்த தலைவர் அல்ல. அவர் தேசிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். அவரைப் போன்ற முக்கியமான தலைவர்கள், வேறு ஏதாவது தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து நேரடியாகப் போட்டியிட வேண்டும்.
வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் அவர் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்? தங்களின் முக்கிய இலக்கு பாஜகவா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியா என்பதை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் சுய பரி சோதனை செய்ய வேண்டும்”. இவ்வாறு டி.ராஜா கூறினார்.
ஏற்கனவே உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என அந்த மாநில தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜாவும் வேண்டுகோள் விடுத்திருப்பதால் ராகுல் காந்தி வயநாட்டை விட்டுவிட்டு அமேதியில் போட்டியிடுவாரா? அல்லது கடந்த முறைபோல் இரு தொகுதிகளிலும் போட்டியிடுவாரா? என்பது காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் தெரிந்துவிடும்.




