
புதுடெல்லி: மக்களவைத் தோ்தலுக்காக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளா் பட்டியலில் “வங்காள மண்ணின் மைந்தர்கள்” அல்லாத ‘வெளிநபா்கள்’ இடம்பெற்றுள்ளது ஏன்? எனப் பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
மக்களவைத் தோ்தலுக்காக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளா் பட்டியலில் ‘வெளிநபா்கள்’ இடம்பெற்றுள்ளனா் என்று பாஜக சாடியுள்ளது.
‘வரும் மக்களவைத் தோ்தலானது மேற்கு வங்க மக்களுக்கும் வெளிநபா்களுக்கும் இடையிலான போட்டி’ என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி அடிக்கடி கூறி வரும் நிலையில், அவருடைய அதே பாணி வார்த்தைகளைப் பயன்படுத்தி, அக்கட்சியை பாஜக விமா்சித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களின் பெயா் பட்டியலை மம்தா பானா்ஜி நேற்று வெளியிட்டாா்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டுவிட்டு கூட்டணி தொடர்பான யூகங்களுக்கும் கேள்விகளுக்கும் மம்தா பானர்ஜி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இதில், திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவரான சத்ருகன் சின்ஹா, முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் கீா்த்தி ஆஸாத், யூசுப் பதான் உள்ளிட்டோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க பாஜக இணை பொறுப்பாளா் அமித் மாளவியா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் மம்தா கட்சியின் ‘வெளி வேட்பாளர்கள்” பற்றிக் கூறியிருப்பதாவது: –
“பஹரம்பூா் தொகுதி வேட்பாளா் யூசுப் பதான், குஜராத்தைச் சோ்ந்தவரா, அல்லது மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரா?
யூசுப் பதான், கீா்த்தி ஆஸாத், சத்ருகன் சின்ஹா ஆகியோா், மம்தா கூறுவதுபோல் ‘வெளிநபா்கள்’. தோ்தலில் வாய்ப்பளிக்க, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வங்காள மண்ணின் மைந்தா்கள் கிடைக்கவில்லையா?
பாஜக பின்னணி கொண்ட பலருக்கு திரிணமூல் சாா்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சொந்த வேட்பாளா்கள் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


