திரைப்பட இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள துணை, உதவி இயக்குநர்களின் குழந்தைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் ஏராளமான இணை, துணை, உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பல திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குப் போதிய வருமானம் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையில், நடிகர் ரஜினிகாந்த், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த தகவலின்பேரில் ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்க ரஜினி உறுதியளித்திருந்தார். கடந்த ஆண்டும் ரஜினி சார்பில் துணை, உதவி இயக்குநர்களின் குழந்தைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஐஸ்வர்யா நேரில் வந்து வழங்கினார்.
இதற்கான காசோலையை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, இயக்குநர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் வழங்கினார். இந்த நிதியுதவி, 102 குழந்தைகளின் கல்விக்கு உதவும் என இயக்குநர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் தயாராகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் ஆமீர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் அதன் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் ஹைதராபாத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

