Cuddalore : விவசாயியை பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரிப்பு..என்ன நடந்தது..?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயியைக் காரில் வந்தவர்கள் வழிமறித்துப் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்தது தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயி ராஜேந்திரன் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே சாலையில் ஓடிய காட்சி, திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கரச் சாட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டுமல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவம் அளிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *