சிறுமியருக்குப் பாலியல் தொல்லை..சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டல்..!

கோவையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன் வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டிய கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேசன் என்னும் பெயருடைய தேவாலயத்தில் மத போதகராகப் பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ். இவர் கேரளத்தில் மதபோதனை செய்து வந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள அவர் வீட்டில் விழா ஒன்று நடந்துள்ளது.

அந்த விழாவின்போது தனது மாமனாரால் தத்தெடுக்கப்பட்ட 17 வயதுச் சிறுமிக்கும், அவளுடன் வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமிக்கும் மதபோதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
அதன்பிறகு சிறுமியர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஜான் ஜெபராஜ் அவர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் தங்களுக்குப் பாலியல்  தொலை அளித்தது குறித்துத் தங்கள் பெற்றோரிடம் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

இதையடுத்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்த ஜான் ஜெபராஜ் கோவையில் இருந்து வெளியேறி விட்டார். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிப்பதற்குக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதேபோல் வேறு யாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *