Crime: புதுவையில் 4 ஆண்டுகளாகத் திருந்தி வாழ்ந்து வந்த பிரபல ரௌடியை பழிக்கு பழியாகச் சிலர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அடுத்த சோலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரௌடி மணிமாறன். இவர்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் மணிமாறன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அன்பு ரஜினி என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், முத்தியால்பேட்டை பகுதியைக் காலி செய்து விட்டுக் கிராம பகுதியான மடுகரை பகுதியில் வசித்து வந்தார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அன்பு ரஜினி கொலை சம்பவத்திற்கு பிறகு, மணிமாறன் எந்தக் குற்ற சம்பவத்திலும் ஈடுபடாமல் மடுகரையில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அன்பு ரஜினி கொலைக்குப் பழிக்கு பழியாக அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இன்று மணிமாறனை கொலை செய்து உள்ளனர்.
மேலும் அன்பு ரஜினி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யபட்டனர். அதைத் தொடர்ந்து 3-வதாக மணிமாறன் கொலை செய்யபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைச் சிறப்பு அதிரடிபடை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
