
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என 10 அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் மோதி வெற்றிப்பெற வேண்டும். அதன்படி வெற்றிப்பெற்று பட்டியலில் முதல் 4இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்த நிலையில் உலக கோப்பை லீக் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத தொடக்க வீரரான சுப்மன் கில் பங்கேற்கிறார். இதேபோல் போட்டியை வழிநடத்த ரோகித் சர்மா களமிறங்குகிறார். இருவரது பேட்டிங் இந்திய அணிக்குப் பலமாகும்.
அதேநேரம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் மோதப் பலபரீட்சை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே நடந்த இரு போட்டிகளிலும் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதத் தயாராகியுள்ளது. இதே போன்று 2 லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொள்ளும் முனைப்பில் உள்ளது.
இரு அணிகளும் தலா இரு வெற்றியுடன் இன்று மோத உள்ளதால் கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா- பகிஸ்தான் அணிகளுக்கும் இடையே இதுவரை மொத்தமாக 134 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில், 73 போட்டிகளில் பாகிஸ்தானும், 56 போட்டிகளில் இந்தியா-வும் வெற்றிபெற்றுள்ளன.
மதியம் 2 மணிக்குப் போட்டி தொடங்கும் நிலையில், 12.30 மணிக்குக் கிரிக்கெட் மைதானத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களுக்குச் சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங், அரிஜித் சிங் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இசை விருந்து படைக்க உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.



