Lok Sabha Elections 2024: தேர்தலைச் சீர்குலைக்க சதி? மத்திய உள்துறை எச்சரிக்கை!

Advertisements

இந்தியாவில் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1½ லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்குத் தயாராகி வருகிறார்கள்.

இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாச வேலைக்குப் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி இருப்பதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக உளவு பிரிவு போலீசார், மாநில சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் ஆகியோர் மிகவும் உஷாராகச் செயல்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் பணிகளில் வேகம் காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் “ராமேசுவரம் கபே” ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த இருவரும் பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்றத் திட்டம் தீட்டிய தகவலை அடுத்தே தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக உளவு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, தேர்தல் மற்றும் பண்டிகை காலங்களில் மத்திய அரசிடமிருந்து இது போன்ற எச்சரிக்கை தகவல்கள் எப்போதும் வருவது வழக்கம்தான். இருப்பினும் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கிறோம் என்றார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும். இதனால் தேர்தல் களம் இப்போது இருப்பதைவிட பரபரப்பாகவே காட்சி அளிக்கும்.

இதனைப் பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக் கூடாது என்பதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யப் போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *