
புதுடில்லி:
‘அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம். காங்கிரஸ் தான் அவமதித்தது’ எனப் பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது சர்ச்சையான நிலையில், பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம். அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான். தற்போது அதை மறைக்கக் காங்கிரஸ் முயற்சிக்கிறது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்த வரலாற்றைத் தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார்.
அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்க ஒரு வம்சத்தின் கட்சி முழுமையாக ஈடுபட்டது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். அமித்ஷா முன்வைத்த உண்மைகளால் காங்கிரஸ் கட்சியினர் பேச்சின்றி திகைத்தனர். அதனால் இப்போது நாடகமாடிக் கொண்டுள்ளனர். அம்பேத்கரால் தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றக் கடந்த 10 ஆண்டுகளாகப் பா.ஜ., அரசு பணியாற்றி வருகிறது.
காங்., அம்பேத்கரை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தோற்கடித்தது. நேரு அம்பேத்கருக்கு எதிராகத் தேர்தல் பிரசாரம் செய்தார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை; பார்லி., மத்திய மண்டபத்தில், அவரது உருவப்படத்தை வைக்க இடம் ஒதுக்கிப் பெருமை சேர்க்க மறுத்தனர். காங்கிரஸ் தனது ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்தன. அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை பூர்த்தி செய்யப் பா.ஜ., அரசு பாடுபடுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


