காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்.!

Advertisements

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை வானகரத்தில் உள்ள அத்தி இயற்கை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் பல்துறை மருத்துவர்கள் குழுவினரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 மணியளவில் குமரி அனந்தன் உயிர் பிரிந்தது. இதனை அவரது மகளும், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உறுதி செய்தார்.இதனையடுத்து, மறைந்த குமரி அனந்தன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது….என்று தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் என்ற பெருமை மறைந்த குமரி அனந்தனையே சேரும். இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்டவர். தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *