
தமிழகத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களையும், சட்டம்-ஒழுங்கையும் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டின் முதல் நாளில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தற்போதைய அரசு மக்கள் தேர்ந்தெடுத்த வெளிப்படையான மற்றும் நேர்மையான சமூக நீதிக்கான அரசு என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை மக்களுக்குத் தடையின்றி வழங்குவதில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மிகக் கடுமையான மற்றும் தெளிவான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பித்தார். குற்றவாளிகள் எவ்வளவு பெரிய அதிகாரப் பின்னணியில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றித் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதேசமயம், சட்ட நடவடிக்கையின் போது எக்காரணம் கொண்டும் நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் காவல்துறை மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்துவதில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். பெண்களின் பாதுகாப்புக்காகச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதோடு, மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் இதில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின் நிறைவு விழாவில், முதலமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசுகளையும் அவர் வழங்க உள்ளார்.


