விசாரணை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பு !அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் !

சென்னை: அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி, இன்று காலை முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதில் அமலாக்கத்துறை விசாரணை குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

அன்னிய செலாவணி மோசடி, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து, அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில், அமலாக்க துறை சோதனை நடந்தது. பொன்முடியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது மூத்த மகன் கவுதம சிகாமணிக்கும், ‘சம்மன்’ அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று (ஜூலை 18) சென்னை வந்தார்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பெங்களூருவில் இருக்கும்போதே, பொன்முடியிடம் போனில் பேசிய ஸ்டாலின், விசாரணை விபரங்களை கேட்டறிந்தார். முதல்வர் சென்னை வந்ததால், இன்று காலையிலேயே பொன்முடி முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறையின் விசாரணை தொடர்பாக முதல்வரிடம் விளக்கியதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் மற்றும் அவர் மகன் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிக்கத்தக்க வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கதுறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *