Chitrai Festival 2024: பக்தர்களுக்குத் தசாவதார காட்சி அளித்த கள்ளழகர்!

Advertisements

அழகர் மலைக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாகப் பூப்பல்லக்கு விழா நடைபெற்றது.

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திற்கு அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு எதிரே கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.

முன்னதாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மதுரை மாநகருக்குள் நுழையும்போது மக்கள் எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குத் தசாவதார காட்சி அளித்தபின், அழகர் மலைக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாகப் பூப்பல்லக்கு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, இன்று அதிகாலையில் கள்ளழகரை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *