Chief Minister N. Rangaswamy: 22ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி!

வரும் 22ந் தேதி காலை 9.45 மணிக்குப் புதுவை சட்டசபை கூடுகிறது.அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி, 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி: புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் புதுவை சட்டசபையில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாகக் கடந்த செப்டம்பர் 9ந் தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது.

ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22ந் தேதி காலை 9.45 மணிக்குப் புதுவை சட்டசபை கூடுகிறது.

அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி, 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

சட்டசபை கூடும் தகவலைச் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
2024-25ம் நிதியாண்டுக்கான முன்னளி மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன் வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றைச் சட்டசபையில் வைக்க அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

2024-25ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாகச் செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *