Kundrathur Murugan Temple: 400 ஆண்டுளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

Advertisements

குன்றத்தூர் முருகன் கோவிலில் 400 ஆண்டுளுக்கு பிறகு முதல் முறையாகக் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் உருவாகி சுமார் 400 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தக் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது இல்லை. இந்த நிலையில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகப் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலைத் தொடங்கியது.

கோவில் வளாகத்தில் காலையிலேயே சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அங்கு அமைந்துள்ள கொடி மரத்தில் வேல், மயிலுடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவற்றை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இன்று தொடங்கிய பிரம்மோற்சவ விழாவானது 10 நாட்கள் நடைபெறும் நிலையில் வரும் 24ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான அன்று தேர் வீதி உலாவும் முதல் முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

400 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் கோவிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா முதல் முறையாக நடைபெறுவதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தவண்ணம் உள்ளனர். விழா ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீ கன்னிகா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *