தலைமை நீதிபதி நியமனம் வழக்கிலிருந்து நீதிபதி சூர்யகாந்த் விலகல்.!

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கிலிருந்து தலைமை நீதிபதி திடீரென விலகியது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்கும் வகையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதே ஆண்டில் ஒன்றிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என குறிப்பிடப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த வழக்கை, தான் தொடர்ந்து விசாரிப்பது சரியானதா? என்று வினவினார். மேலும்,  இந்த வழக்கில் நான் தீர்ப்பு வழங்கினால் என்னுடைய தீர்ப்பில் சுயநலன் இருப்பதாக குற்றச்சாட்டு எழும்  என்றும் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “அத்தகைய குற்றச்சாட்டுகள் எழாது, இருப்பினும், இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலகிக் கொள்வது நல்ல தீர்வு என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, நீதிபதி சூர்யகாந்த், இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதியாக இல்லாத நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *