
இந்த உருளைக்கிழங்கு வறுவலின் ஸ்பெஷலே அதற்குப் பிரத்யேகமாகத் தயார் செய்யும் ஒரு பொடி தான்.
பெரும்பாலான மக்கள் அதிக விரும்பிச் சாப்பிடும் பொறியல் வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு வறுவல். சாம்பார் சாதம் தயிர் சாதம் என அனைத்துக்கும் ஏற்றது “உருளைக்கிழங்கு வறுவல்”.
இந்த உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் விரும்பிச் சாப்பிடும் ஒன்றாகும்.
இதனை ஒரே மாதிரி செய்து போர் அடிக்குதா? அதற்கு மாற்றாக உருளைக்கிழங்கை கொண்டு செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள்.
இந்த வறுவலின் ஸ்பெஷலே அதற்குப் பிரத்யேகமாகத் தயார் செய்யும் ஒரு பொடி தான். அந்தப் பொடியைச் செய்து சேர்க்கும்போது, உருளைக்கிழங்கின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த வறுவல் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுமாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு…
உருளைக்கிழங்கு – 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு வறுவல் பொடிக்குத் தேவையான பொருட்கள்:
மல்லி விதை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
மிளகு – 1/2 டீஸ்பூன்
கிராம்பு – 1
பட்டை – சிறிய துண்டு
தாளிப்பதற்கு:
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
- முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக நறுக்கி, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, உளுத்தம் பருப்பு, சோம்பு, கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய், மிளகு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டுச் சற்று கொரகொரவென்று அரைத்துப் பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு காடயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து, பின் பொடித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறிவிட்டு இறக்கினால்,
சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
இதனை அப்படியே சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அல்டிமேட் ஆக இருக்கும்.
