
இந்திய சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளரான ஏ வி எம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார் அவருக்கு 86 வயதாகிறது இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏவிஎம் பட நிறுவனம். ஏவி மெயப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சம்சாரம் அது மின்சாரம் சிவாஜி அயன் வேட்டைக்காரன் எஜமான் ராஜா சின்ன ரோஜா மனிதன் என ஏராளமான படங்களை தயாரித்துள்ளது
ஏவி மெய்யப்ப செட்டியார் மறைவுக்கு பின்னர் இந்த நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ஏவிஎம் சரவணன் 1940 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் பள்ளி இறுதி படிப்பு வரை மட்டுமே படித்தவர் . இவரது காலத்தில் ஏவிஎம் நிறுவனம் கொடிகட்டி பறந்தது என்று சொல்லலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை மிகப்பெரிய முதலீட்டில் தயாரித்து தமிழ் சினிமாவுக்கு சர்வதேச சினிமாவின் கதவுகளை திறந்து விட்டவர் ஏவிஎம் சரவணன். எந்த நேரமும் வெள்ளை உடை நெற்றியில் குங்குமம் கடனிவான பேச்சு என்பது ஏவிஎம் சரவணனின் அடையாளமாகும் யாரிடம் பேசினாலும் கைகளை கட்டிக் கொண்டு தன்னடக்கத்துடன் அமைதியாக பேசும் சுபாவம் கொண்டவர். இதனால் இவர் மீது நடிகர்களும் ரசிகர்களும் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பார்கள்
ஏவிஎம் படம் நிறுவனம் என்றால் தாராளமாக நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சரவணன். பெரும்பாலும் குடும்ப படங்களை தயாரித்து வெளியிடுவது ஏவிஎம் சரவணன் விருப்பமாகும். இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் அகில உலக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குனர் சென்னை மாநகர செரிப் ஆகிய பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் தமிழக அரசின் கலைமாமணி விருது புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றை பெற்றவர். ஏவிஎம் படம் நிறுவனம் தயாரித்த நானும் ஒரு பெண் என்ற படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளது. இதே போல் சம்சாரம் அது மின்சாரம் என்ற படமும் பிலிம் பேர் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏவிஎம் பட நிர்வாகம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏ வி எம் சரவணன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் இன்று நாலாம் தேதி காலை 5:30 மணி அளவில் அவர் காலமானார் அவரது உடல் இறுதி மரியாதைக்காக ஏ வி எம் ஸ்டுடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் இன்று காலை 7:30 மணி முதல் வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகள் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஏவிஎம் சரவணனின் மறைவு தமிழ் சினிமா நடிகர்கள் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


