
சென்னை: ” ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகும், அனுமதி வழங்கத் தாமதம் செய்வது ஏன்?,” எனத் தமிழக அரசுக்குச் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகம் முழுதும், 58 இடங்களில் விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அனுமதி கோரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் ஜோதி பிரகாஷ், சேதுராஜ் வழக்கு தொடர்ந்தனர். மனுக்களில், ‘ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்வலங்களுக்கு விதிமுறைகள் வகுத்து, கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. இந்த மனுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம், ஊர்வலத்திற்கு நடத்த அனுமதி வழங்க விதிமுறைகளை உருவாக்கியபிறகும் தாமதிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியது.
இதற்குப் போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மனுக்களைப் பரிசீலனை செய்து வருகிறோம் என விளக்கம் அளித்தார்.
அதேநேரத்தில் மனுதாரர்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகும் அனுமதி வழங்கவில்லையெனப் புகார் கூறினர்.


