பாரதியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம்.!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாகவும், அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார் என்றும், நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதில் பாரதியார் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிற்பி சுப்பிரமணிய பாரதியார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய அரசு செய்த அட்டூழியங்களைத் துணிந்து எதிர்த்துத் தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையைத் தூண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகச் சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான, சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்ததாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *