Advertisements

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்த இந்திய அரசு நாடாளுமன்றக் குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்பியது. அந்தக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணம், மத்திய அரசின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு வலுவாக எடுத்துச் சென்றதாகவே பேசப்பட்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு தூதுக்குழுவுக்காக காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்ட எம்.பி. பட்டியலில் சசி தரூரின் பெயர் இடம் பெறவில்லை.
ஆனால், மத்திய அரசு தன்னிச்சையாக அவரது பெயரை இணைத்து, அதுவும் முக்கிய நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக நியமித்தது. இதுவே காங்கிரஸ் கட்சிக்குள் முதல் சலசலப்பை ஏற்படுத்தியது. யணத்தின் போது, “இந்தியா அமைதியை விரும்புகிறது; ஆனால் எல்லையின் மறுபுறம் அதற்கு இடமில்லை.
பயங்கரவாதிகளை கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளது” என தரூர் பேசிய உரைகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதை பாஜக ஆதரவாளர்கள் வெளிப்படையாக பாராட்ட, காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி வெடித்தது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, முன்னாள் எம்.பி. உதித் ராஜ், “பாஜக செய்தித் தொடர்பாளர்களை விஞ்சும் அளவுக்கு சசி தரூர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்” என கடுமையாக விமர்சித்தார்.
“உங்களை பாஜகவின் சூப்பர் ஸ்போக்ஸ்பர்சனாகவோ, வெளியுறவு அமைச்சராகவோ அறிவித்தாலும் ஆச்சரியமில்லை” என்ற அவரது எக்ஸ் பதிவு, காங்கிரஸ் உள்வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் உடன் தரூர் எடுத்துச் செய்த செல்பி, மேலும் எண்ணெய் ஊற்றியது.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது கடினமான வேலை கம்பீர் செய்கிறார்” என்ற அவரது பதிவு, காங்கிரஸ் தொண்டர்களின் கோபத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இதனை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா தன் வசமாக மாற்றிக் கொண்டார்.
“பிரதமர் மோடிக்கு தான் இந்தியாவில் மிகக் கடினமான வேலை” என்று தரூர் ஒப்புக்கொண்டதாக அவர் கூற, காங்கிரஸ் – பாஜக மோதல் மேலும் தீவிரமடைந்தது. இதனால், தரூர் மீது காங்கிரஸ் தலைமையின் அவநம்பிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே இந்த மோதலின் மையம்.
திருவனந்தபுரத்தில் இருந்து நான்கு முறை எம்.பியாக வென்றுள்ள சசி தரூர், கேரள முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தபோது, “தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை” என்ற பதில் கிடைத்ததாக தகவல்.
அந்த பதில் தரூரை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகே, கொச்சியில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திலும், ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளாமல் தவிர்த்ததாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ஒரு நிகழ்ச்சியில் ராகுல் தாமதமாக வந்தபோது, மேடையிலிருந்தே தரூர் வெளியேறிய சம்பவம், இருவருக்குமான பிளவு வெளிப்படையாகத் தெரிய வைத்தது.இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் கே. முரளீதரன், “சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை, திருவனந்தபுரத்தில் எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்க மாட்டோம்” என்று வெளிப்படையாகவே கூறியது, மோதல் உச்சத்தை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.
இப்போது அரசியல் கேள்வி ஒன்றே—கேரள முதல்வர் கனவுக்காக சசி தரூர் எடுத்துக் கொண்ட தூரநோக்கு, அவரை காங்கிரஸ் தலைமையிலிருந்து மேலும் தள்ளிவிடுமா? அல்லது, ராகுல் காந்தியின் ‘ஆப்பு’ தரூரை புதிய அரசியல் பாதைக்குத் தள்ளுமா? இந்த அரசியல் நாடகம், கேரள அரசியலில் இன்னும் பல திருப்பங்களை உருவாக்கப் போகிறது..
Advertisements




