Chandrababu Naidu:ஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

Advertisements

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பா.ஜ.கப்போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவராகச் சந்திரபாபு நாயுடு ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கவர்னர் நசீர் அகமதுவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் பிரமாண்டமாக நடந்தது.

விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி விமானம்மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரைச் சந்திரபாபு நாயுடு, கவர்னர் நசீர் அகமது ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விழாவில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 24 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்குக் கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்துகளை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பு விழா நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தெலுங்கு தேசம் ஜனசேனா, பா.ஜ.கக்கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றக் கொண்டபோது கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

ஆந்திர மாநில அமைச்சர்கள் தேர்வுகுறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு இறுதி முடிவு எடுத்துள்ளார்.

அமைச்சர்கள் பட்டியலில் 17 புது முகங்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்படுகிறது.

இது தவிர நடிகர் பவன் கல்யாண் உட்பட அவருடைய கட்சியில் 3 மந்திரிகளும், பா.ஜ.க.வுக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு ஒரு மந்திரி பதவியைக் காலியாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மந்திரிகள் குழுவில் 3 பெண்கள் உள்ளனர்.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை திருப்பதி வருகிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *