Chandigarh Mayor – Manoj Sonkar: பாஜக மாநகராட்சி மேயர் ராஜினாமா!

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பிலிருந்து பாஜகவின் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரின் 8 ஓட்டுகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி, 16 வாக்குகள் பெற்ற பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதில் மோசடி நடந்திருப்பதாகவும், திட்டமிட்டு 8 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக மேயர் தேர்தல் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக் கோரியும் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் – ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.

பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு ஆம் ஆத்மி இடைக்கால தடையும் கோரியது. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை உயர் நீதிமன்ற பதிவாளர்மூலம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் நிலையில் சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பிலிருந்து பாஜகவின் மனோஜ் சோன்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *