Champions Trophy criket 2025:இந்திய அணி கண்டிப்பாகப் பாகிஸ்தான் வரும் – மோசின் நக்வி நம்பிக்கை!

Advertisements

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.,

கராச்சி:2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்தத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடிச் சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுகுறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்துச் சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாகக் கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் என நம்புவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்.

எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *