
காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரிக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஐயாக்கண்ணு தலைமையில் புறப்பட்ட தமிழக விவசாயிகள் ஐம்பது பேரைக் காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என ஆண்டுக்கு மூன்று முறை நெல் பயிரிட்டு விளைவிக்கப்பட்டது. கர்நாடகத்தில் கபினி, ஹேரங்கி எனக் காவிரியின் துணையாறுகளில் அணைகளைக் கட்டியதாலும், பருவமழை பொய்த்ததாலும் நீர்வரத்துக் குறைந்தது.
இதனால் அண்மைக்காலங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சம்பா பருவத்தில் மட்டும் நெற்பயிர் விளைவிக்கப்பட்டது. அதுவும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போனது. இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததாலும், காவிரியில் நீர் வரத்து இல்லாததாலும் குறுவை நெல் பயிரிடுவதற்காக ஜூன் 12ஆம் நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கர்நாடக அணைகளில் முக்கால் வாசித் தண்ணீர் இருக்கும் நிலையிலும், காவிரி மேலாண்மை வாரியம் பல முறை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும் அவர்கள் தண்ணீர் திறக்கவில்லை. இடையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வரை திறக்கப்பட்டது. மழை குறைந்து வரத்துக் குறைந்ததும் அந்த நீரும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் காவிரியில் நீர் திறந்து விடக் கோரித் தில்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காகத் தென்னிந்திய ஆறுகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட விவசாயிகள் இன்று புறப்பட்டுத் தில்லிக்குச் செல்லத் திட்டமிட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து ஒரு மண்டபத்தில் காவல் வைத்துள்ளனர்.
அப்போது பேசிய ஐயாக்கண்ணு, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் தமிழ்நாட்டில் பத்து இலட்சம் ஏக்கரில் ஒரு போகம் கூட நெல் பயிரிட முடியவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படித் தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்துவிடக் கோரிக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கப் புறப்பட்ட தங்களைக் காவல்துறையினர் தடுத்துச் சிறைவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.




