Cauvery Water :காவிரி விவகாரம் ! மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் சிவகுமார்

Advertisements

பெங்களூரு:

”காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவரிப்போம்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். இதன் வாயிலாக, அணை கட்டுவதில், அவர் பிடிவாதமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பெங்களூரின், சதாசிவ நகரில் உள்ள தன் இல்லத்தில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்றமே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இது தொழில்நுட்ப அமைப்பாகும். தொழில்நுட்ப அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். மேகதாது அணை கட்டியிருந்தால், இன்று இத்தகைய பிரச்னைகளே ஏற்பட்டிருக்காது.கடந்த ஆண்டு, 400 டி.எம்.சி., க்கும் மேற்பட்ட தண்ணீர், வீணாகக் கடலில் சேர்ந்தது. இதில் சிறிதளவு நீரை மேகதாது அணை கட்டி சேகரித்து வைத்திருந்தால், நதி நீர் பங்கீடு விவாதமே ஏற்பட்டிருக்காது.

மேகதாது அணையின் தண்ணீரை, நாம் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது, மேகதாது அணை உதவிக்கு வரும். இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும். கர்நாடக அரசும் இதைப் பற்றி மனுவில் விவரித்துள்ளது. விசாரணையின் போதும் கூறுவோம்.நீதிமன்றத்தின் உத்தரவை, நாங்கள் மதிக்கிறோம். நமது மாநில விவசாயிகளின் நலனைக் காப்போம். தமிழக அரசு தன் பங்கு தண்ணீரை, எந்த நோக்கத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதைப் பற்றி நாம் கேள்வி எழுப்ப முடியாது.ஆனால் கஷ்டமான காலத்தில், இந்தத் தண்ணீரை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில், அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிட வேண்டாமென, நமது விவசாயிகளுக்கு அரசு ஆலோசனை கூறியுள்ளது. அதே போன்று தமிழக அரசும், அம்மாநில விவசாயிகளுக்கு ஆலோசனை கூற வேண்டும்.தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை, அரசியல் நோக்கில் பா.ஜ., மட்டுமே எதிர்க்கிறது. மாநிலத்தின் எந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாதீர்கள் என, கூறுகிறார்களே தவிர, நமக்கு இழப்பு ஏற்பட்டதாக, யாரும் கூறவில்லை. ஏனென்றால் நமது விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில், தண்ணீர் அளித்துள்ளோம்.அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, ‘இந்த நேரத்தில் பயிரிடாதீர்கள்’ என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று கூட உச்ச நீதிமன்றத்தில், தண்ணீர் திறந்து விடுவது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானால், மேகதாது அணை திட்டம் மட்டுமே, ஒரே தீர்வாக இருக்கும் என, உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழகத்துக்கு கூற விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதன் வாயிலாக, மேகதாது அணை கட்டுவதில், துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *