
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டுமென்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும் என்றும் சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இவ்வாறு பிற மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக, தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.



