கோவை:
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்றுவிட்டுத் திரும்பிய நிலையில் எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் புகழ் பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலரும் கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலைக்குச் சென்று சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார்கள்.
மகர விளக்குப் பூஜைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் தனியாகக் கார் அல்லது வேன் வாடகைக்கு எடுத்தே சபரி மலைக்குச் சென்று திரும்புகின்றனர்.
இந்நிலையில், ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பால்காரன் சாலை பகுதியில் ஐயப்பன் பக்தர்கள் வந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியிலிருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கொண்டு 5 பேர் காரில் பயணித்துள்ளனர்.
ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில் ஐந்து பேரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, பால்காரன் சாலை பகுதியில் சென்றபோது காரை ஓட்டி வந்த சுவாமி என்பவர் தூக்க கலக்கத்தில் காரைச் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் வெங்கடஆதிரி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மகேஷ் குமார், துரைசாமி, சுவாமி ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை மரத்தில் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.