கோவை மத்திய சிறையில் கஞ்சா புழக்கம்!

Advertisements

கோவை:

கோவை மத்திய ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிதடி, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஆயுள் தண்டனை கைதியான செந்தில் என்பவர் தன்னிடம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

செந்தில் கோவை கணபதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவர்.

செந்திலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. செந்திலுக்கு மத்திய சிறையின் மெயின் வாயிலுக்கு வெளியில் சுத்தம் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்போது சிலர் வெளியே இருந்து வரும்போது அவரிடம் கஞ்சாவை கொடுப்பதும், அதனை அவர் ஆசனவாயிலில் வைத்துச் சிறைக்குள் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லையெனச் செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென அவர் அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாகத் தலையால் மோதிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து செந்திலை ஜெயில் அதிகாரிகள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்திலின் முகத்தில் இரு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. இதற்காக முகத்தில் 16 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் ராஜன், செந்தில் மற்றும் பார்வையாளர்கள்போல் வந்து அவர்களுக்குக் கஞ்சா சப்ளை செய்த பிரபுராஜ் ஆகிய 3 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரபுராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *