
ஹைதராபாத்:
‛புஷ்பா 2′ திரைப்படம் பார்க்கச் சென்றபோது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் தான் இன்று சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல முடிவு செய்துள்ள நிலையில் அவரைப் பார்க்கக் கூடாது என்று போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2. இந்தத் திரைப்படம் கடந்த மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. முன்னதாகக் கடந்த 4ம் தேதி அதாவது ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இதனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் அதிகமாகக் கூடினர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் கீழே விழுந்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தார். ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்தார். தற்போது ஸ்ரீதேஜுக்கு மருத்துமவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான புகாரில் சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அதன்பிறகு அவருக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
4 வாரம் இடைக்கால ஜாமீன் விரைவில் முடிய இருந்த நிலையில் நம்பள்ளி நீதிமன்றம் கடந்த 3ம் தேதி அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனால் அல்லு அர்ஜுன் நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி வரும்பட்சத்தில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பார்.
இதற்கிடையே தான் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஸ்ரீதேஜ் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது. இந்நிலையில் தான் சிகிச்சையில் உள்ள ஸ்ரீதேஜை பார்க்க இன்று நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்தார்.
இதுபற்றி அறிந்த போலீசார் அவருக்கு அட்வைசுடன் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ராம்கோபால் பேட்டை போலீஸ் சார்பில் நடிகர் அல்லு அர்ஜுனின் மேனேஜர் மூர்த்தியிடம் நோட்டீஸ் என்பது வழங்கப்பட்டுள்ளது.
அதில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவனைப் பார்க்கச் செல்ல வேண்டாம். மருத்துவமனைக்கு அல்லு அர்ஜுன் சென்றால் கூட்டம் கூடிவிடும். இதனால் மக்களுக்குத் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே மக்களின் பாதுகாப்பு கருதி சிறுவனைப் பார்க்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



