
கோபி அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் கோபி போலீசார் இரண்டு வாலிபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாகச் சிலர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கோபி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் பிரேமா தலைமையில் நடைபெற்ற ரோந்து பணியின்போது தடப்பள்ளி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த பாசில் என்ற 25 வயது வாலிபரிடம் சோதனை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து கோபி போலீசார் பிடிபட்ட பாசிலிடம் விசாரணை மேற்கொண்டபோது அவருக்குப் போதை மாத்திரைகளைக் கரட்டடிபாளையம் பகுதியைச் சேர்ந்த மது என்பவர் தான் வாங்கி கொடுத்துளதாகத் தெரிய வந்தது.
இதனையடுத்து பிடிபட்ட பாசில் மற்றும் மது ஆகிய இருவரையும் கைது செய்த கோபி போலீசார் அவர்களிடமிருந்த போதை மாத்திரை மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

