Canada:இந்தியா மீது பொருளாதார தடையா? அதிகரிக்கும் மோதல் போக்கு..!

ஒட்டாவா:கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இவ்விவகாரத்தில் இரு நாடுகளிடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.

நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரைத் திரும்பப் பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

இந்தநிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.

இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்குப் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *