விண்வெளித்துறையைத் தனியார் மயமாக்கும் மத்தியப் பாஜக அரசின் முயற்சிகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில், விண்வெளிச் சாதனைகளின் பின்னணியில் உள்ள சொல்லொணா வலியை மறந்துவிட முடியுமா? என வினவியுள்ளார்.
இரவு பகல் பாராமல் குடும்பங்களை மறந்து உழைத்த நமது விஞ்ஞானிகளின் தியாகம், தோல்விகளைக் கடந்து சிந்திய கண்ணீர், அவர்களின் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்கும், முறையான ஊதியத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் அதிகார வர்க்கத்திடம் கோரிக்கை மனுக்களையும் கண்ணீர்க் கடிதங்களையும் அனுப்ப வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1969 ஆகஸ்ட் 15 அன்று, தொலைநோக்குப் பார்வையோடு நேரு, இந்திரா காந்தி, விக்ரம் சாராபாய் ஆகியோர் இணைந்து, இஸ்ரோவுக்கு அடித்தளமிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.கிட்டத்தட்ட 60 ஆண்டுக் காலம் தன்னிறைவுக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நமது விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும் இலட்சியத்தையும், இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கப் பாஜக அரசு துடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம்; அதைத் தனியாருக்குத் தாரைவார்க்க விடமாட்டோம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

