Brazil Plane crash:சல்லி சல்லியாய் நொறுங்கிய விமானம்.. 62 பேர் உயிரிழந்த சோகம்!

Advertisements

சாவ் போலோ: ‘விமானம் விழும் சத்தம் கேட்டு, என் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். விமான விபத்துக்குள்ளானதை நேரில் பார்க்கும்போது ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை உணர்ந்து நடுநடுங்கி விட்டேன்,’ என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். கடவுள் தான் என்னைக் காப்பாற்றி விட்டாரெனக் கடைசி நிமிடத்தில் விமானத்தைத் தவற விட்ட பயணி தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ‘வோபாஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.டி.ஆர்.-72 என்ற பயணியர் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உள்ளூர்வாசிகள் சொல்வது என்ன?
விமானம் விபத்துக்குள்ளானபோது உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உள்ளூர்வாசி பெலிப் மாகல்ஹேஸ் அளித்த பேட்டி: ”விமானம் விழும் சத்தத்தை நான் கேட்டதும், என் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். விமான விபத்துக்குள்ளானதை நேரில் பார்க்கும்போது, அசம்பாவிதம் நடந்து விட்டதை உணர்ந்து பயந்து நடுநடுங்கினேன்” என்றார்.

மிக உரத்த சத்தம்
மற்றொரு உள்ளூர்வாசி நதாலி சிக்காரி கூறியதாவது: தான் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, மிக அருகில் உரத்தம் சத்தம் கேட்டது. ட்ரோன் சத்தம்போல் இருந்தது. நான் ஓடிவந்து பால்கனியிலிருந்து பார்த்தேன். விமானம் பறப்பதை பார்க்கும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை உணர்ந்தேன். சில நொடிகளில் குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

விமானத்தைத் தவற விட்ட பயணி சொல்வது என்ன?
தாமதமாக வந்ததால், குறிப்பிட்ட அந்த விமானத்தைத் தவற விட்ட பயணி ஆட்ரியானோ ஆஸிஸ், ”நான் சற்று தாமதமாக வந்தேன். விமான நிலையத்தில் இருந்தவர்களிடம், ‘என்னை அனுமதிக்குமாறு வாக்குவாதம் கூடச் செய்தேன். அவர்கள் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டேன். கடவுள் தான் என்னைக் காப்பாற்றி விட்டார்,” என்றார்.

கால்கள் நடுங்குகின்றன!

இதேபோல, அந்த விமானத்தைத் தவற விட்ட ஜோஸ் பிலிப் கூறுகையில், ”நான் முன்கூட்டியே வந்து விட்டேன். ஆனால், விமானத்தில் ஏறுவதற்கான நேரம் கடந்து வந்து விட்டது. உங்களை அனுமதிக்க முடியாது என்று ஊழியர்கள் கூறி விட்டனர். நான் தகராறு செய்து அவர்களைத் தள்ளிக்கூட விட்டேன். இப்போது விமான விபத்து கேள்விப்பட்டதும், என் கால்கள் நடுங்குகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும், என் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்று,” எனக் கூறியுள்ளார்.

துக்கம் அனுசரிப்பு
‘விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவர்களுக்காக நாம் அஞ்சலி செலுத்துவோம்’ எனப் பிரேசில் அதிபர் லூலா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா வருத்தம்
‘இந்தச் சோகமான விபத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்’ எனப் பிரேசிலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *