வேண்டும் வரம் அருளும் பாடிகாட் முனீஸ்வரன்!
சென்னையில் எந்தப் பகுதியில் எந்த வாகனம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டாலும் இந்தப் பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜை செய்து விட்டுப் பின்பு தான் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கோயிலில் வாகனங்களைப் பூஜை செய்தால் வாகனம் நிரந்தரமாக ஒருவரிடம் தங்கும் என்பது ஐதீகம்.
1860-ஆம் ஆண்டு ஆர்காட்டிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குலதெய்வமாகத் தங்களுடன் எடுத்து வரப் பட்டவர் இந்த முனீஸ்வரன். ஆரம்பத்தில் தலைமை செயலக வளாகத்தில் இருந்தவர் 85 ஆண்டுகளுக்கு முன் சென்டிரல் ரயில் நிலையத்தின் எதிரில் பல்லவன் பணிமனையின் முன் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அப்போது இங்குப் பல்லவன் பேருந்துகளுக்குப் பாடி கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் இந்தப் பெயரிலேயே முனீஸ்வரன் அழைக்கபட்டார் பின்னாளில் இது பாடிகாட் முனீஸ்ரன் என்று மாறியது.

இந்தப் பகுதியில் முன்பு ஆங்கில அதிகாரிகள் குடியிருப்பு இருந்ததாகவும், அதில் ஒரு அதிகாரி இந்தக் கோயிலை அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த நாள் அவருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்த மக்களின் அறிவுரைபடி கோயில் அகற்றம் உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு முனீஸ்வரரை வணங்கியவுடன் குணமானார். இந்தச் சம்பவத்திற்கு பிறகே அங்கு முனிஸ்வரர் பிரபலம் அடைந்தார். சென்னை நகரின் பல பிரபலமான கோயில்களில் இந்தக் கோயில் மிக முக்கியமான ஒன்று. இங்கு முனீஸ்வரனை குலதெய்வமாக வணங்குபவர்கள் தலையை மொட்டை அடித்து வேண்டுதல் செய்கிறார்கள்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அழைப்பிதழ்களை முனீஸ்வரன் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகே மற்றவர்களுக்கு வணங்குகிறார்கள். பூஜையின்போது எலுமிச்சை சுருட்டு சிலர் வேண்டுதலுக்கு ஏற்ப மதுபானங்கள் வைத்தும் வழிபடுகிறார்கள். முனிஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே காவல் தெய்வமாவார். இவரை வழிபடுபவர்களை பயம், தயக்கம், சோம்பல் ஆகியவற்றிலிருந்து விடுவித்து எந்த இடத்திலும் நமக்குப் பாதுகாப்பை தருவார்.
