
பழனி:
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவது,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாகச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செருப்பு அணிய மாட்டோம் என ஒரு வேள்வி தொடங்கினோம்.
அதன் 48 நாட்கள் இன்று நிறைவடைந்ததால் பழனியில் வந்து சாமி தரிசனம் செய்தேன்.
அடுத்த மண்டலத்துக்குத் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட உள்ளேன். தைப்பூச நாளில் மக்கள் மிகுந்த எழுச்சியோடு அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் கோவில்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அறநிலையத்துறை பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர மறுத்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் அங்கிருந்து தைப்பூச திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டு அமைச்சர் காந்தியை சுட்டிக் காட்டினேன்.
இதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த அறிக்கைக்கு நாங்கள் பதில் அளித்துக் கொண்டு வருகிறோம்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மற்ற மாநிலங்களுக்குத் திருப்பி விட்டனர் என்றும், மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய்.
தமிழகத்தில் கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து, தியாகிகள் செவிலியர்களுக்கு நிரந்தர வேலையென எதுவும் செய்யாமல் மக்களுக்கு முதலமைச்சர்தான் அல்வா கொடுத்து வருகிறார்.
அல்வா கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் முதல்-அமைச்சர் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்குத் தி.மு.க. அரசு அல்வா கொடுத்து வருகிறது.
விஜய் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட யாரை சந்தித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து வருகிறோம்.
ஏ.சி. அறையில் அரசியல் வல்லுனர்களுடன் கருத்துகளைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டால் வெற்றிபெற முடியாது. என் மண் என் மக்கள் என்பதைப் போன்ற யாத்திரையை நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் நாங்கள் தலையிட முடியாது. அரசியலில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களைச் சட்டப்படி பயன்படுத்தக் கூடாது.
ஆனால் த.வெ.க.வில் சிறார் அணி அமைத்துள்ளதால் அதில் யாரை நியமிப்பார்கள் எனத் தெரியவில்லை.
