உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாக பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வளங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் நிலையில் மிக கடுமையான சூழலை உலகம் தற்போது சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கைகளை உருவாக்கி வருவாதாகவும், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மத்தியிலும் கூட, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார்.
சீர்திருத்தம் என்பது தங்களுக்கு ஒரு கட்டாயம் அல்ல; அது தங்கள் ஆழ்ந்த நம்பிக்கை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்குவதற்கான கூடுதல் சீர்திருத்தங்களை தான் உறுதியளிப்பதாகக் கூறினார். அதிக உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் அரசு ஊக்கத்தொகைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். வெறும் விதிமுறைகளை மட்டும் மாற்றவில்லை,
நாங்கள் விதிமுறைகள் தொடர்பான ஒட்டுமொத்த கொள்கையையுமே மாற்றியுள்ளதாகக் கூறினார். உலகம் இந்தியாவை வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒளிமயமான புள்ளியாகவே பார்க்கிறது என்று குறிப்பிட்டார். இன்று ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ ஆகியவற்றை ஏளனம் செய்பவர்கள், தங்கள் முன்னோர்களின் அதே மனநிலையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிருப்பதாகத் தெரிவித்தார்.


