Biryani: இப்படியும் ஒரு வரலாறா?

பிரியாணி என்னும் சொல் “வறுத்த” என்ற பொருள் தரும் “beryā(பெ)” பாரசீகச் சொல்லிலிருந்து வந்தது…

பிரியாணி என்ற சொல் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்த கூடியது. பெரும்பாலானோருக்கு விருப்ப உணவு பிரியாணி தான். யாருக்கு தான் பிரியாணி பிடிக்காமல் இருக்கும்… ஆம்… அதன் வாசனையும், ருசியும் ஐம்புலன்களையும் அடிமையாக்கும் வசீகர குணம் கொண்டது. ஆனால் பிரியாணி இந்திய உணவு கிடையாது.

உண்மையில் பிரியாணி எங்குத் தோன்றியது என்ற விவரங்கள் இல்லாவிட்டாலும், பல ஆய்வாளர்கள் கருத்துப்படி பிரியாணி எப்படி இந்தியாவில் இவ்வளவு பிரபலமானது என்று தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாசிய தகவல்கள்…

பிரியாணி என்னும் சொல் “வறுத்த” என்ற பொருள் தரும் “beryā(பெ)” பாரசீகச் சொல்லிலிருந்து வந்தது. பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது.

பண்டைய காலத்தில் போர்களத்தில் போர் வீரர்களுக்குப் பிரியாணி தான் உணவாக இருந்துள்ளது. பெர்சிய நாட்டுப் போர்வீரர்கள் போர் புரிய வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும்போது உணவுக்காக அரிசியும், மசாலா பொருள்களும் கொண்டு செல்வார்களாம். களத்தில் போர் செய்தபின்னர் காட்டுக்குள் விரைந்து மிருகங்களை வேட்டையாடித் தாங்கள் ஓய்வெடுக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சமைப்பார்கள்.

மாமிசத்தை நன்கு சுத்தம் செய்து தாங்கள் கொண்டு வந்த மசாலாவை அதன் மீது பூசி இரவெல்லாம் ஊற விடுவார்கள். அதிகாலையில் மசாலாவில் ஊறிய மாமிசத்தை அரிசி கலந்த தண்ணீரில் போட்டு அடுப்பில் இறுக்கமாக மூடி வைத்து விடுவார்கள். மீண்டும் பகலில் போருக்குக் கிளம்புவதற்கு முன்பாக மாமிசத்தில் வெந்த உணவை அனைவரும் சாப்பிடுவார்களாம்.

ஆரம்ப காலத்தில் மசாலா, அரிசி ஆகியவை மட்டும் சேர்த்துக் கொண்டிருந்த வீரர்கள் பின்னாட்களில் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் வாசனை பொருட்களையும் உணவுடன் சேர்த்தனர்.

பெர்சிய போர் வீரர்களின் இந்த மாமிச சாப்பாடு இஸ்லாமியர்களைக் கவர்ந்தது. நாளடைவில் அவர்களும் இந்த மாமிசம் கலவை சாப்பாட்டை விரும்பி உண்ணத் தொடங்கினர். பின்பு இந்தியாவிற்கு வந்த முகலாயர்களால் தான் கலவை உணவு அரசுக் குடும்பம் மட்டும் சாப்பிடும் “பிரியாணியாக” உருவெடுத்தது.

தங்களுடைய நாட்டில் போர் வீரர்களுக்குச் சத்தான உணவில்லை என்பதை அறிந்த ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் போர் வீரர்களுக்குப் பிரியாணி செய்வது குறித்து கற்றுக் கொடுத்தார். இப்படி தான் இஸ்லாமியர்கள் ஆட்சி அமைத்த இடங்களில் பிரியாணியும் பரவத் தொடங்கியது.

ஹைதராபாத் நிஜாம் ஆட்சி செய்த போதுதான் முதல் முதலாகப் பிரியாணியில் நெய் சேர்க்கும் பழக்கம் உருவானது. அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் பரவியிருந்ததால் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் நெய் சேர்க்கப்பட்டது. நாளடைவில் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற வகையில் பல வகையான பிரியாணிகள் உருவாகத் தொடங்கின. அரண்மனை சமையலறையில் மட்டுமே பரவி இருந்த பிரியாணியின் செய்முறை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எல்லா மக்களுக்கும் போய்ச் சேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *