President of Bharat: சர்ச்சையைக் கிளப்பிய அழைப்பிதழ்!

Advertisements

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது…

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அழைப்பிதழில் வழக்கமாகக் குறிப்பிடப்படும் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரத குடியரசுக்கு வாழ்த்துகள் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியைப் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயர் பாரத் என்பதையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். இதே போன்று பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கூட, இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்நிலையில் தான் வழக்கமாகக் குறிப்பிடுவதை போன்று அல்லாமல், ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி வரலாற்றைத் திரித்து இந்தியாவை பிரிக்கலாம். அதனால் எங்களைத் தடுக்க முடியாது” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பாரத் என அரசியல் சாசனத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பாஜக விளக்கமளித்துள்ளது. “நாட்டின் கௌரவம் மற்றும் பெருமை தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பைப் பதிவு செய்கிறது” எனப் பாஜக தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *