
தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டித் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில், பெண் விடுதலை, சமத்துவம், தேசிய உணர்வு, மொழிப்பற்று ஆகிய உயர்ந்த கொள்கைகளைத் தனது எழுத்துக்களால் மக்கள் மனங்களில் விதைத்துப் புதிய சிந்தனைகளுக்கு ஒளியூட்டிய விடுதலைச் சிந்தனையாளர் பாரதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்மொழியான தமிழின் மகத்துவத்தை உலகம் அறியச் செய்தவர் பாரதியார் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், சுப்பிரமணிய பாரதியார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதியவர், வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர் பாரதியார் என்று குறிப்பிட்டுள்ளார். தாய்மொழியையும், தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார் எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், அறிவின் ஒளியாலும், எழுத்தின் தீயாலும், விடுதலையின் கனலை மனிதர்களின் உள்ளங்களில் ஏற்றிய புரட்சியாளர் சுப்பிரமணிய பாரதியார் என்று குறிப்பிட்டுள்ளார். சமூக நீதியும், சமத்துவமும், பெண்ணுரிமையும் வலியுறுத்திக் காலத்தைத் தாண்டிய சிந்தனைகளால் தன் பாடல்கள் மூலம் சமூக மாற்றத்துக்கான பாதையைத் திறந்தவர் என்றும் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.



