
சண்டிகர்; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகச் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறி உள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருப்பவர் பகவந்த் மான். தமது அலுவலகத்தில் இருந்தபோது 3 முறை மயங்கி விழுந்ததாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு, பரிசோதனை நடத்தப்பட்டதா என எந்தத் தகவல்களையும் அங்குள்ள ஆம் ஆத்மி அரசு வெளியிடவில்லை.
இதையடுத்து, அவர் டில்லியிலிருந்து சண்டிகருக்கு சென்றபோது விமானத்தில் மது அருந்தி, விமானத்தை விட்டு இறங்கியபோது ஓடுபாதையில் தவறி விழுந்து விட்டார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா குற்றம்சாட்டி இருந்தார். அவரின் இந்தக் கருத்து பெரும் அதிர்ச்சியை தர எதிர்க்கட்சிகள் சரமாரியாக ஆம் ஆத்மி அரசாங்கம்மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.
இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதை, பிக்ரம் சிங் மஜிதியா உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது;
முதல்வர் பகவந்த் மானுக்குக் கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளது. கல்லீரல் சிரோசிஸ் என்று அதற்குப் பெயர். இந்தப் பாதிப்பின் 4ம் நிலையில் அவர் இருக்கிறார். மதுவை கைவிட வேண்டும் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவரது நுரையீரல் மற்றும் வயிற்றில் ஏராளமான நீர் தேங்கியதால் மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளார். இவை அனைத்தும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும். பகவந்த் மான் இப்படி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது முதல்முறை அல்ல. பலமுறை இதே பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
பகவந்த் மான் உடல்நிலை குறித்து நான் பேசிய பின்னரே, அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குச் சென்று இருக்கிறாரென ஆம் ஆத்மி அரசாங்கம் ஒரு வரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஒரு முதல்வரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஆம் ஆத்மி அரசாங்கம் கவனத்தில் கொண்டு நடக்க வேண்டும்.இவ்வாறு பிக்ரம் சிங் மஜிதியா தமது அறிக்கையில் கூறி உள்ளார்.
