Bengaluru:கொட்டித்தீர்த்த கனமழை: குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியாதல் மக்கள் அவதி!

Advertisements

பெங்களூருவில் கேந்திரிய விஹாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிக்கித்தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுமூலம் மீட்டுக்கொண்டுவந்தனர்.

பெங்களூரு:கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்து விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த முறை தொடக்கத்திலேயே மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்தக் கனமழையால் பெங்களூருவில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்குத் தேங்கி நின்றது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். கனமழையால் பெங்களூரு மற்றும் சுற்றுப்புறத்தில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக ஈஜிபுரா பிரதான சாலை ஆறுபோல் மாறியது. ஆர்.ஆர்.நகர் பி.இ.எம்.எல். லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்து முழங்கால் அளவுக்குத் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், மோட்டார் சைக்கிள் நீரில் மூழ்கின. வீடுகளில் இருந்த பொருட்களும் மழைநீரில் சேதம் அடைந்தன. கேந்திரிய விஹார், நாகதேவனஹள்ளி, புலிகேசி நகரிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தவர்களை ரப்பர் படகுகள் மூலமாகத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகப் பெங்களூரு உள்பட 21 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *