
சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை:சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் 4½ கி.மீத்தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்து வந்தனர்.
இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரெயில் சேவை இன்று தொடங்கியது. இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் இயக்கப்படுவதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடற்கரை – வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரைவரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை, மீண்டும் தொடங்கிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காத்தால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

