Bangaru Adigalar Funeral: அருள்வாக்கு கூடத்தில் நல்லடக்கம்!

Advertisements

Bangaru Adigalar Funeral: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை சந்தன நாற்காலியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவாக இருந்து வந்த,  பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று காலமானார். வழக்கமாக மனிதர்கள் மரணித்தால் உறங்கும் விதமாகத் தான் உடல் அடக்கம் செய்யப்படும். ஆனால் சித்தர்கள் போன்றோர் உயிரிழந்தால் அமர்ந்தபடி வைத்துத் தான் உடல் அடக்கம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்குக் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தியான நிலையில் சித்தி அடையும் வகையில் சந்தன நாற்காலியில் வைத்துப் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கருவறையின் பின்புறம்  உள்ள அருள்வாக்கு கூடத்தின் மேற்கு திசையில் தோண்டப்பட்ட குழியில், புற்று மண்டப பகுதியில் வில்வம், உப்பு, திருநீறு, தர்பை, குங்குமம் மற்றும் ஐம்பொன்  உள்ளிட்ட 18 வகையான  பூஜைப்பொருட்கள் இடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அங்குத் திரண்டு இருந்த பக்தர்கள் கண்ணீர் மல்க ”ஓம் சக்தி பராசக்தி” மற்றும் “அம்மா, அம்மா” என முழக்கமிட்டனர். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி, துப்பாக்கி குண்டுகள் முழங்கப் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.

முன்னதாகப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான தலைவர்களும், பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினர். அதன்படி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, பாஜக் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *