
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக காசாவில் போருக்கு நடுவே மக்கள் பக்ரீத் தொழுகையை நடத்தியுள்ளனர்.பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக நடைபெற்று வரும் போரில் சுமார் 50,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் போர் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகையில் காசா மக்கள் ஈடுபட்டனர்.
காசா பகுதியை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; காசாவின் சுமார் 50% பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா பகுதியில் பரவலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,600ஐ கடந்துவிட்டது.மேலும் இஸ்ரேல், ஹமாசுக்கு எதிராக அழுத்தத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது. காசா போர் நிறுத்தம் முடிவதற்குமுன், இஸ்ரேல் உணவு, எரிபொருள், தண்ணீர் உள்ளிட்டவற்றை நிறுத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு அல்லல்படுகிறார்கள்.உணவு, குடிநீர், தங்குவதற்கான குடிசைகள், உயிர் காக்கும் மருந்துகள் என எல்லாவற்றிற்கும் காசாவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்து அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்திருப்பதால், தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லேஜி பிஸ்கெட், காசாவில் 2300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இப்படியான சூழலிலும் மக்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையை மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய நிலவரப்படி , இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 6 நாட்களில் 600 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது, ஹமாஸ் குழுவின் பிடியில் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர், இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில், பலி எண்ணிக்கை 55,000 ஐ நெருங்கியுள்ளது. இஸ்ரேல், போர் நிறுத்தத்தை நீட்டிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காசா நகரம் தற்போது தரை மட்டமாகியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 2000 ஐ நெருங்கியுள்ளது.



